Published : 11 Jun 2025 10:47 AM
Last Updated : 11 Jun 2025 10:47 AM
மதுரை: “கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே.” என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.
கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார்.
கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே.” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் கூறியது என்ன? முன்னதாக, சென்னையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியானது அறிவியல்பூர்வமான, தொழில்நுட்பரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
இது மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அதனை முழுமையாக ஆய்வு செய்யட்டும். அவர்கள் தொழில்நுட்பரீதியாக நிரூபிக்கட்டும். அவர்களே முடிவு செய்யட்டும். இது அரசியல்வாதிகள் முடிவு செய்யும் விஷயம் அல்ல. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பிரதமர் மோடியும் தமிழின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சொல்லி வருகிறார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT