Published : 11 Jun 2025 06:00 AM
Last Updated : 11 Jun 2025 06:00 AM
பெரம்பலூர் / அரியலூர்: வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்தினாலும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றிபெற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் எனும் அமித்ஷாவின் எண்ணம் இன்னும் கைகூடவில்லை. ஏற்கெனவே அவர்கள் கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக கட்சிகள்கூட கூட்டணியில் இணைய தயக்கம் காட்டி வருகின்றன. தவெக-வை கூட்டணியில் இணைக்க போராடி வருகின்றனர். கூட்டணியை உருவாக்கவே இவ்வளவு பாடுபட வேண்டிய சூழ்நிலையில், ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது நகைப்புக்குரியது.
ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினாலும்கூட தமிழகத்தில் ஒரு இடத்திலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. எத்தனை ஆன்மிக மாநாடுகளை நடத்தினாலும், தமிழகத்தில் அவர்கள் வெற்றிபெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
நாங்களும் கேட்போம்... அரியலூரில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளதுபோல, நாங்களும் இந்த முறை திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். ஆனால், பேச்சுவார்த்தை அடிப்படையில் இறுதி முடிவை எடுப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT