Published : 11 Jun 2025 05:50 AM
Last Updated : 11 Jun 2025 05:50 AM
திருச்சி: எனது தொகுதிக்கு வந்த பாலப் பணியை மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றிய அமைச்சர் கே.என்.நேரு மீது எனக்கு வருத்தம் என்றும், அடுத்தவர்கள் சாப்பாடை எடுத்து சாப்பிடுவது தவறு என்றும் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், எம்.பி.க்கள் திருச்சி துரை.வைகோ, கரூர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், எம்எல்ஏக்கள் லால்குடி சவுந்தரபாண்டியன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசியது: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டி, சமுத்திரத்துக்கு 2 பாலங்கள் கட்ட அறிவிப்பு வெளியிட்டார். தற்போதுதான் அதற்கான ஒப்புதலை போராடிப் பெற்றுள்ளோம். இந்தப் பணிகளை வேறு தொகுதிக்கு மாற்றக் கூடாது. ஏற்கெனவே எனது தொகுதிக்கு உட்பட்ட சமுத்திரம் பகுதிக்கான பாலம் கட்டும் பணியை, மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மாற்றியதால்தான், எங்கள் அமைச்சர் (கே.என்.நேரு) மீது எனக்கு வருத்தம் ஏற்பட்டது.
அவரவர் சாப்பாட்டை அவரவர்தான் சாப்பிட வேண்டும். அடுத்தவர்கள் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவது தவறு. அந்தந்த தொகுதிக்கு வந்த பணிகளை அந்தந்த தொகுதிக்குத் தான் செய்ய வேண்டும். எம்.பி. துரை.வைகோவுக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்ததே இந்தப் பகுதிகள்தான் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். (அப்போது எம்.பி. துரை.வைகோ குறுக்கிட்டு பணிகள் தொடர்பாக மட்டும் பேசுங்கள் என்றார்.) 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள துவாக்குடி- ஜீயபுரம் அரைவட்ட சுற்றுச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து எம்எல்ஏ பழனியாண்டியை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘இது ஒரு பிரச்சினையாங்க. இது தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என கூறி உள்ளனர். இந்தப் பிரச்சினையை பெரிதுப்படுத்தாதீங்க’’ என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் எம்எல்ஏ பழனியாண்டி நடத்திவரும் கல் குவாரியில் விதிகள் மீறப்பட்டதாக வருவாய்த் துறை ஏற்கெனவே ரூ.23 கோடி அபராதம் விதித்திருந்தது. அப்போது, என் மீதான காழ்ப்புணர்ச்சியால் அமைச்சர் நேருதான் இப்படிச் செய்கிறார் என எம்எல்ஏ பழனியாண்டி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT