Published : 11 Jun 2025 04:48 AM
Last Updated : 11 Jun 2025 04:48 AM
சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்திய தேர்தல் ஆணைய ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் இந்தாண்டு அக்டோபரில் தொடங்கும். இதற்கு முன்னதாக, ஜூலை மாதம் முதல் வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். தற்போது தமிழகத்தில் 68,400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்குச்சாவடிகள் ஒவ்வொன்றிலும் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் சீரமைக்கப்படும்.
இதுதவிர, உயரமான கட்டிடங்கள், நகர்ப்புற குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் வசதிக்காக, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் எந்த தவறுகளும் இல்லாமல் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால், அதை கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதேபோல், தேர்தல் ஆணையத்தின் விதிகள், அறிவுறுத்தல்கள் அடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT