Published : 11 Jun 2025 04:32 AM
Last Updated : 11 Jun 2025 04:32 AM
சென்னை: கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் தமிழக முதல்வர் கவனம் செலுத்துகிறார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை, பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதுதவிர, 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை, வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரசாரம் என உயர்க் கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது.
இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், "அப்பா”, "பல்கலை வேந்தர்" என தினசரி புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில் கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென் படவில்லை.
100-க்கு 100 சதவீதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும், பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT