Published : 11 Jun 2025 04:25 AM
Last Updated : 11 Jun 2025 04:25 AM
சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சென்னை புத்தகப் பூங்கா உட்பட ரூ.29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ரூ.1.85 கோடி செலவில் சென்னை புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் பல்வேறு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களையும் முதல்வர் வெளியிட்டார். மேலும், பாடநூல் கழகத்தின் நூல்களை வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் எளிதில் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இணைய வழி விற்பனைக்கான மின்வணிக இணையதள வசதியையும் (www.tntextbooksonline.com) முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும், பொது நூலக இயக்ககத்தின்கீழ் செயல்படும் நூலகங்களுக்கு மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிக்கான சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ரூ.24.20 கோடியில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.2.20 கோடி மதிப்பிலான நூல்கள், ரூ.1.59 கோடியிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், ரூ.60 லட்சம் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட முழுநேர கிளை நூலகத்துக்கான புதிய கட்டிடம், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.49.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்கள் என மொத்தம் ரூ.29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் ஆர்.பிரியா, சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT