Published : 11 Jun 2025 04:20 AM
Last Updated : 11 Jun 2025 04:20 AM

தமிழகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவ எதிர்பார்ப்பு: முதல்வர் கோரிக்கை

சென்னை: புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, சமூக- பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்ப்பதாக உலக வங்கி வணிக மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை, தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தரமணி மையம் புதிய ஒத்துழைப்பு மண்டலங்கள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் கூடிய அதிநவீன வசதியை வழங்குகிறது. இந்த மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இதன்பலனாக தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம், தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம் ஆகிய திட்டங்கள் இந்தியாவுக்கே லீடர் என்று சொல்லும் இடத்தை அடைந்திருக்கிறது.

மேலும் வறுமையை ஒழிக்கும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் முன்னேறியுள்ளன. அதுமட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு இருக்கிறது.

கூடிய விரைவில், சென்னையில் தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக, உலக வங்கி பெரிய அளவில் உதவியிருப்பதுடன், இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கான மாடலாக தமிழகத்தின் இந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்று பாராட்டியும் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு நீர்வள - நிலவள திட்டம், தமிழ்நாடு கடலோர பேரிடர் துயர் தணிப்புத் திட்டம் ஆகியவற்றிலும் உலக வங்கி உதவியுள்ளது. நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்துக்கு ’டெவலப்மண்ட் பாலிசி லோன்’ என்ற வகையில் 190 மில்லியன் டாலரை உலக வங்கிக் கடனாக வழங்கியிருக்கிறது.

மொத்தம், 1.12 பில்லியன் டாலர் அளவுக்கு உலக வங்கியின் கடனுதவியில், தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டம், மத்திய அரசின் விருதைப் பெற்ற தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மைத் திட்டம் உட்பட 7 திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கின்றன.

நீடித்த நிலையான மேம்படத்தக்க வளர்ச்சியை தமிழகம் அடைய வேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடுதான் இது. வருங்காலத்தில், உலக வங்கி உதவியுடன் 409.79 மில்லியன் டாலர் மதிப்பிலான முக்கியமான சில திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தப் போகிறோம்.

குறிப்பாக, வீ சேஃப் (WE-SAFE) எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம். 5 ஆண்டுகளில் ரூ.1,185 கோடியில் உலக வங்கி நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பல திட்டங்களை இணைந்து செயல்படுத்த அரசு ஆர்வமாக உள்ளது. குறிப்பாக காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகள், எஸ்டிஜி இலக்குகள், மகளிருக்கான அதிகாரம் வழங்குதல் ஆகிய இலக்குகளை எட்டுவதில் உலக வங்கியின் உதவி இன்றியமையாதது.

குறிப்பாக, வளர்ச்சி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 சதவீதமாக அதிகளவில் உள்ளது. வரும் காலங்களில் புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்கு தேவையான சமூக- பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம். முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்க உலக வங்கியுடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மத்திய அரசின் கேபினட் செயலாளர் முனைவர் டி.வி.சோமநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் வென்காய் ஜாங், உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் அகஸ்டே டானோ கோமே, சென்னை மையத் தலைவர் சுனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x