கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம் - அமைச்சர் தகவல்

நாமக்கல் முதலைப்பட்டி நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார்
நாமக்கல் முதலைப்பட்டி நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார்
Updated on
1 min read

நாமக்கல்: “கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பில் இரவு வான் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியுள்ளது,” என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

நாமக்கல் முதலைப்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் ரூ. 1.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி, நாமக்கல் முதலைப்பட்டி நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நூலகத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மலைவாழ் மக்களுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்குக் கல்வி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால், அவர்களது குழந்தைகளுக்கு ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. உண்டு, உறைவிடப் பள்ளிகளில் குறைபாடுகள் இருந்தால் கண்டறிந்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பில் இரவு வான் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது” என்றார்.

மேலும், தொடர் கொலைகள் குறித்த கேள்விக்கு, “குற்றம் நடந்தால் அதில் தொடர்புடைவர்களைப் போலீஸார் கைது செய்கின்றனர். எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குறை கூறுகின்றனர். திமுக ஆட்சி மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக அவதூறுகளை எதிர்க்கட்சியினர் பரப்பி பொய் பிரச்சாரம் செய்து மக்களைக் குழப்ப நினைக்கின்றனர். வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெறும்” என்று அவர் அவர் கூறினார்.

முன்னதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ‘தமிழ்நாடு உரிமைகள்’ திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள நகர் மற்றும் கிராமப் பகுதியைச் சேர்ந்த 190 பேர் சமுதாய வழி நடத்துநர் மற்றும் சமுதாய மறுவாழ்வு பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேருக்குப் பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார். துணை மேயர் செ.பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in