Published : 10 Jun 2025 05:57 PM
Last Updated : 10 Jun 2025 05:57 PM
சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், “பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குறிப்பிட்ட தெருக்கள் மிகவும் குறுகலானவை என்பதால் தேர் செல்வதில் சிக்கல் இருப்பதாக கூறினார். அப்போது நீதிபதி, கோயில் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும், தெய்வங்களை வழிபடும் இடத்துக்கு அனைத்து தரப்பினரையும் எந்த பாரபட்சமும் இன்றி அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட தெருவுக்குள் தேர் செல்ல முடியுமா? சாலையின் அகலம், தேரின் நீள, அகலம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT