Published : 10 Jun 2025 04:50 PM
Last Updated : 10 Jun 2025 04:50 PM
மதுரை: “மதுரையில் ஜூன் 22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும்,” என இந்து முண்ணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஜூன் 22-ல் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வேல்களுக்கு வண்டியூரில் உள்ள மாநாட்டு அலுவலகத்தில் இன்று (ஜூன் 10) காலை கணபதி ஹோமம் மற்றும் வேல் பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் கண்காட்சி 13-ம் தேதி தொடங்குகிறது. அறுபடை வீடுகள் அமைப்பதற்காக முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்து முருகனின் வேல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல்வேறு அமைப்பினர் அவதூறு பரப்பி வருகின்றனர். இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
சென்னிமலையை கிறிஸ்தவர்கள் தங்களுக்குரியது எனக் கூறியபோது எந்தக் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர். இதைக் கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாக முருக பக்தர்கள் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும். மாநாட்டில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி தந்தால் அவருக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்படும். நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர்கள் மோகன் ஜி, ரஞ்சித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கண்டிப்பாக மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கிறோம்.
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு போலீஸார் அனுமதி வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஜூன் 13-ல் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். திமுக அமைச்சர் சேகர்பாபு, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மக்கள் வரமாட்டார்கள், ஜூலை 7-ல் அரசு நடத்தும் மாநாட்டுக்கு தான் வருவார்கள் என கூறியுள்ளார். கடவுள் இல்லை எனக் கூறியவர்கள் கூட இப்போது முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். அவர்களும் முருக பக்தர்கள் மாநாட்டை தாராளமாக நடத்தட்டும். அதை விடுத்து நாங்கள் நடத்தும் மாநாட்டுக்கு ஏன் பயப்பட வேண்டும்?
தற்போது தமிழகத்தில் இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 2026 தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். மதுரை போலீஸார் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மாநாட்டை தடுக்கும் பணியை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT