பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஜனநாயகத்துக்கு சவால்: செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: “பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் யாரை நியமிக்க விரும்புகிறாரோ, அவரை நியமித்து தான் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்படி நியமிக்கப்பட்டவர்கள் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது இந்திய ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக 140 கோடி மக்கள் தொகையை கொண்டு, 97 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் கடந்த 2024 மக்களவை தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்திருக்கிறார்கள். 1952 மக்களவை தேர்தல் முதற்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் மீதிருந்த நம்பிக்கை சமீபகாலங்களில் சிதைந்து வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதில் கூறுவது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

சமீபத்தில் 2024 மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை ஆதாரத்தோடு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தேர்தல் முறைகேடுகள் என்பது மூன்று விதமாக நடைபெற்று வருகிறது. ஒன்று, தேர்தல் நாளுக்கு முன்பாக, இரண்டு, தேர்தல் நடைபெறும் நாளன்று, மூன்று, தேர்தல் முடிந்த பிறகு நடைபெறுகிறது. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்து நீக்கப்படுகின்றன.

2019 மக்களவை தேர்தலில் மட்டும் 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் நாளன்று மாலை 5.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக 65 லட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 7 முதல் 12 சதவீத வாக்குகள் பல்வேறு வாக்குச்சாவடிகளில் திடீரென கூடியிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 2 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிப்பது நடைமுறை சாத்தியமே இல்லை.

இத்தகைய முறைகேடுகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதுள்ள நம்பகத்தன்மை குறித்தும் எழுப்பப்படுகிற குற்றச்சாட்டுகளுக்கு தொழில்நுட்ப, நிர்வாக காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் தட்டிக்கழித்து வருகிறது. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதைத் தான் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கடந்த காலங்களில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களை 2023 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நியமிக்க மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. அதற்கு மாறாக, தேர்தல் ஆணைய உறுப்பினர்களை தேர்வு செய்கிற குழுவில் இந்தியாவின் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக மத்திய அமைச்சரை சேர்த்து பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் என்று மூவர் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்பட்டது.

இப்படி மாற்றியமைக்கப்பட்டதன் மூலமாக மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக் குழுவில் பிரதமரும், மத்திய பாஜக அமைச்சரும் சேர்ந்தால் பெரும்பான்மை பலத்துடன் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து புறக்கணிக்கப்படுகிறது. இதன்படி, பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் யாரை நியமிக்க விரும்புகிறாரோ, அவரை நியமித்துத் தான் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்படி நியமிக்கப்பட்டவர்கள் பாஜகவின் கைப் பாவையாக செயல்பட்டு வருவது இந்திய ஜனநாயகத்துக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

மேலும், தேர்தல் பத்திர நன்கொடைகள் மூலமாக மொத்த நன்கொடையில் 66 சதவிகிதத்தை திரட்டிய பாஜக, தேர்தல் களத்தில் சமநிலைத் தன்மையை சிதைத்து, வெற்றி வாய்ப்புகளை தன்பக்கம் திருப்பிக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆதரவு, தேர்தல் பத்திர நன்கொடை குவிப்பு, அதிகார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு தேர்தல் அரசியலில் பாஜக வெற்றி பெற்று வருகிறது.

கடந்த 2015 முதல் 2024 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி ஆட்சிகளை கவிழ்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக பாசிச, சர்வாதிகார ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களின் கருத்துகளை திரட்டுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எடுக்கிற முயற்சிகளுக்கு நாட்டு மக்களின் ஆதரவை பெறுவதன் மூலமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in