Last Updated : 10 Jun, 2025 01:46 PM

4  

Published : 10 Jun 2025 01:46 PM
Last Updated : 10 Jun 2025 01:46 PM

‘திருமாவளவன் வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்’ - மத்திய அமைச்சர் எல்.முருகன்

எல்.முருகன் | கோப்புப் படம்.

புதுச்சேரி: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா எனத் தெரியவில்லை. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனை விளக்க புத்தக்கத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முருகன் இன்று வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடு பற்றி கருத்து தெரிவிக்கிறார். அவர் கண்ணை திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்கவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் செய்தித்தாளை திறந்தாலே ஊழல் என்றுதான் செய்தி வரும். இப்போதைய பாஜக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாகும்.

நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். மணிப்பூரில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா என தெரியவில்லை. வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலை அதிமுக இல்லாமல் சந்தித்து கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம். தற்போது அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் கூடுதல் பலம் பெற்றுள்ளோம். இதனால் திமுகவினர் தூக்கத்தை தொலைத்துள்ளனர். திமுக நிர்வாகிகளுக்கு பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்கி விட்டது.

புதுவையின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கருத்துகளை முதல்வர் ரங்கசாமி பிரதமரிடம் தெரிவித்து வருகிறார். புதுச்சேரிக்கு தேவையான நிதி, திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.

திராவிடர் கழகம் என்றாலே கலவரம் உருவாக்குவோர்தான். அவர்கள் தங்களை போலவே பிறரையும் நினைத்து கலவரம் ஏற்படுத்த வருவதாக கூறுகிறார்கள். திருப்பரங்குன்றம் முருகன் மாநாடு தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவத்தில் வேதனை அடைந்த முருக பக்தர்களுக்கு மருந்தாக அமையும். நாங்கள் மதவாத அரசியல் செய்யவில்லை. தமிழகத்தில் தேர்தல் கூட்டணி பற்றி கட்சி தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். தமிழகம் புதுச்சேரியில் வரும் பேரவைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணி வெற்றி பெறும்.” என்று தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x