Last Updated : 10 Jun, 2025 01:40 PM

1  

Published : 10 Jun 2025 01:40 PM
Last Updated : 10 Jun 2025 01:40 PM

சிதம்பரத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விசிகவினர் கைது 

கடலூர்: சிதம்பரத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி துறையினர் அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பேட்டை பகுதிலிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றினார்.

அப்பொழுது கொடிக்கம்பம் அருகே இருந்த டாக்டர் அம்பேத்கர் சிலை மீது எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் அம்பேத்கர் சிலை சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அன்றிரவு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பாஜகவினர் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பர நகர போலீஸார் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதே இடத்தில் அம்பேத்கர் சிலை அமைத்து தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமையில் அக்கட்சியினர் சுமார் 25 பேர் சீர்காழி சாலையில் ஊர்வலமாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். போலீஸார் வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தினார்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதவி கோட்ட பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், தமிழக அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் 25-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டத்தை முன்னிட்டு ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x