“கூட்டணி ஆட்சி ஆசை காட்டி கட்சிகளை இழுக்க பாஜக முயற்சி” - திருமாவளவன்

“கூட்டணி ஆட்சி ஆசை காட்டி கட்சிகளை இழுக்க பாஜக முயற்சி” - திருமாவளவன்
Updated on
1 min read

கூட்டணி ஆட்சி என்ற ஆசையை காட்டி ஒரு சில கட்சிகளை இழுக்க பாஜக முயற்சிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பங்கேற்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா மட்டும்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இதில் அதிமுகவுக்கு உடன்பாடு இருக்கிறதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கூட்டணி ஆட்சி என்ற ஆசையை காட்டி ஒரு சில கட்சிகளை இழுக்க பாஜக முயற்சிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. டெல்லியில் வெற்றி பெற்றது போல் தமிழகத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியாது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமித்ஷா தமிழகத்துக்கு அடிக்கடி வருவார். ஆனால், அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும். தேமுதிக, பாமக கூட்டணியில் சேரும் என அமித்ஷா எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.

வட மாநிலங்களில் விநாயகர், ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுள்களை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் முருகரை பற்றி பேசு கின்றனர். என்ன சூழ்ச்சி செய்தாலும் முருகனும், முருக வேலும் பாஜகவுக்கு கைகொடுக்காது. இது சமூகநீதி மண் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in