Last Updated : 10 Jun, 2025 11:32 AM

12  

Published : 10 Jun 2025 11:32 AM
Last Updated : 10 Jun 2025 11:32 AM

“2026 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும்” - பெ.சண்முகம்

பெ.சண்முகம் | சிபிஎம் மாநிலச் செயலாளர்.

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். 2021 தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது.” என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள், 2026 தேர்தல் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த ஊடகப் பேட்டியில் கூட்டணி பற்றி அவர் பேசியது கவனம் பெற்றுள்ளது.

“தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி மேலும் வலுவடைய என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போது நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் மிக அதிக அவசியம் உள்ளது. அதற்கேற்ப திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது.

ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அது நிச்சயமாக நல்லதாக இருக்காது. ஆகவே, விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசாங்கம் மேலும் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆதரவான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணியை முழுமை யாக முறியடித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற அணி அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும். இவ்வாறு பெ.சண்முகம் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x