Published : 10 Jun 2025 05:54 AM
Last Updated : 10 Jun 2025 05:54 AM
சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.34.19 லட்சம் மதிப்பில் உதவித்தொகை, மற்றும் உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை தொடங்கப்பட்டு அந்த அறக்கட்டளையின் நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படுகிறது. அதோடு, வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு வீரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவும் நிதியுதவி செய்யப்படுகிறது.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை (நேற்று) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சி.மதுமிதாவுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்க ரூ.1,74 லட்சத்துக்கான காசோலையும், துப்பாக்கி சுடுதல் வீரர் தி.எஸ்வந்த் குமாருக்கு ரூ. 4.65 லட்சத்துக்கான காசோலையும், வாள்வீச்சு வீரர் மோ.நிதிஷுக்கு ரூ.1.49 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
மேலும் சைக்கிளிங் வீராங்கனை ஜே.நிறைமதிக்கு ரூ.9.5 லட்சம் மதிப்புள்ள அதிநவீன சைக்கிளிங் உபகரணத்தையும், சைக்கிளிங் வீராங்கனை ஜெ.பி.தன்யதாவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பு பயிற்சி மேற்கொள்ள ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைகள் ஜெ.சஹானா, ஜெ.நேகா ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சி பெற தலா ரூ.90 ஆயிரத்திற்கான காசோலைகள், தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியை நடத்தியதற்காக தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலை என ஒட்டுமொத்தமாக ரூ.34.19 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து துணை முதல்வர் வழங்கினார்.
சைக்கிளிங் வீராங்கனை ஜே. நிறைமதி கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் சைக்கிளிங் போட்டியில் வெண்கலப்பதக்கமும், கடந்த ஏப்ரலில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு சைக்கிளிங் டிராக் போட்டியில் தனிப்போட்டி மற்றும் குழுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT