Published : 10 Jun 2025 09:02 AM
Last Updated : 10 Jun 2025 09:02 AM
எருதுக்கு நோவாம் காக்கைக்கு கொண்டாட்டமாம் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக-வில் இப்போது நடக்கும் விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட திமுக-வுக்கே செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இப்போது எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கிறார். விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு இவரது மகனும் எம்பி-யுமான கவுதமசிகாமணி செயலாளராக இருக்கிறார். பொன்முடி விழுப்புரம் மாவட்ட திமுக-வின் அசைக்க முடியாத அதிகார மையமாக இருந்தபோது, அவரை எதிர்த்து அரசியல் செய்தவர் அன்னியூர் சிவா. துரைமுருகன், கே.என்.நேரு, ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் வைத்துக்கொண்டு பொன்முடியை தாண்டி தனி ஆவர்த்தனம் செய்துவந்தார் சிவா.
இந்த நிலையில், 2021-ல் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டார் சிவா. ஆனால் அதை லாகவகமாக தட்டிவிட்ட பொன்முடி, தனது விசுவாசியான புகழேந்திக்கு விக்கிரவாண்டியை வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார். உடல் நலக் குறைவால் புகழேந்தி காலமானதால் கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தனது இன்னொரு விசுவாசியான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச்சந்திரனை நிறுத்த முயன்றார் பொன்முடி. ஆனால், துரைமுருகன், ஜெகத், நேரு கூட்டணி மூலம் தனக்கு அந்த வாய்ப்பைப் பெற்றார் அன்னியூர் சிவா. அந்த நேரத்தில் தான் கவுதமசிகாமணிக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை தலைமை வழங்கியது என்பதால் சிவாவை ஜெயிக்க வைத்தே ஆகவேண்டிய கட்டாயம் பொன்முடி தரப்புக்கு ஏற்பட்டது.
இருந்த போதும் சிவா சீட் வாங்கிய விஷயத்தை இன்னும் மறக்காமல் இருக்கும் பொன்முடி, 2026 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதிக்கு மீண்டும் ஜெயச்சந்திரனை முன்னிறுத்த முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் பொதுவெளிக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, புலம்ப ஆரம்பித்திருக்கிறார் சிவா. அண்மையில் நடைபெற்ற விழுப்பும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பொன்முடியையும் மேடையில் வைத்துக் கொண்டு அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார் சிவா.
அந்தக் கூட்டத்தில், “நான் எவ்வளவு காலம் அமைச்சருடன் (பொன்முடி) இருந்தேன்… எவ்வளவு தூரம் தள்ளி இருந்தேன் என எல்லோருக்கும் தெரியும். விழுப்புரம் மாவட்டத்தில் 1993-ல் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அன்றைககு அமைச்சரின் காரை ஓட்டிச் சென்றவன் நான். இடையில் பலரும் என்னென்னவோ அரசியல் செய்தனர். கூட இருப்பவர்கள் சொல்வதைத் தான் அமைச்சர் கேட்பார். அதனுடைய விளைவுதான் இது. இனிமேல் கேட்கமாட்டார் என நினைக்கிறேன்.
சாதி இல்லை என்று சொல்வதெல்லாம் சும்மா. நம்ம சாதிக்காரன் மேலே வந்துவிடக்கூடாது என நினைப்பவன் நிறைய பேர் இருக்கிறான். அமைச்சர் என்னைக் கொஞ்ச காலம் தள்ளி வைத்திருந்தார். அப்போதுகூட அவரை எங்க ஊர் அமைச்சர் என்று தான் சொல்லி இருப்பேனே தவிர அவரது பெயரைச் சொன்னதில்லை. எல்லா நிகழ்ச்சியிலும் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டுத்தான் செல்வேன். இப்போது நான் எம்எல்ஏ ஆகியிருக்கிறேன் என்றால், அதற்கு அவரது (பொன்முடி) உழைப்புதான் காரணம்.
2006-ல் நான் கட்சியை விட்டு போய்விடுவேன் என எல்லோரும் சொன்னார்கள். என்னிடம் அமைச்சர் பேசினார். நான் கட்சியை விட்டுப் போகமாட்டேன் எனக் கூறினேன். அப்போது நான் பொதுக் குழு உறுப்பினர். அந்தப் பதவியை கொடுத்ததும் அமைச்சர் தான். பல விஷயங்களை அமைச்சர் மறந்துவிட்டார். அவரை நினைக்கவே விடாமல் என்னை போட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
விக்கிரவாண்டியில் 2026-ல் யார் நின்றாலும் உதயசூரியனுக்கு நான் ஓட்டுக் கேட்பேன். என்னை பற்றி அமைச்சருக்கு தெரியும். எனக்கும் அவருக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பது போன்ற தோற்றத்தை நிர்வாகிகள் ஏற்படுத்தி வருகின்றனர். எங்களுக்குள் எதுவும் இல்லை” என்று சொன்ன சிவா தொடர்ந்து, “கவுதமசிகாமணி சட்டமன்ற உறுப்பினராகி...” என ஆரம்பிக்க, குறுக்கிட்ட பொன்முடி, “அதெல்லாம் வேண்டாம்” என தடுத்தார். ஆனாலும், “நான் தப்பா எதுவும் சொல்லவில்லை. கவுதமசிகாமணி எந்த இடத்துக்கு வந்தாலும், முதல் ஆளாக வாழ்க எனச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லி முடித்தார் சிவா.
சிவாவின் புலம்பல் குறித்து நம்மிடம் பேசிய பொன்முடி ஆதரவாளர்கள் சிலர், “விக்கிரவாண்டி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள சிவா வெள்ளைக் கொடி வீசுகிறார். திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடியோ அவரது மகன் கவுதமசிகாமணியோ களமிறங்கலாம் என்ற பேச்சு உள்ளது. இதைத் தெரிந்து கொண்டு தான் ‘கவுதமசிகாமணி சட்டமன்ற உறுப்பினராகி’ என சிவா பேச்சை எடுத்திருக்கிறார். ஒருவேளை, கவுதமசிகாமணிக்கு வாய்ப்பளித்தால் தனக்கு விக்கிரவாண்டியில் சீட் கிடைக்க தடங்கல் செய்யக் கூடாது என்பதற்காகவே பொன்முடிக்கு பழசை எல்லாம் நினைவூட்டி புத்தி சொல்ல ஆரம்பித்திருக்கிறார் சிவா” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT