Published : 10 Jun 2025 05:51 AM
Last Updated : 10 Jun 2025 05:51 AM
சேலம்: சேலத்துக்கு 2 நாள் பயணமாக நாளை (ஜூன் 11) வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு நாளை வருகிறார். காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வரும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்கிறார்.
அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அன்று மாலை சேலம் செல்லும் முதல்வர் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அன்றிரவு மேட்டூரில் தங்குகிறார். மறுநாள் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். பின்னர் சேலம் இரும்பாலை அருகேயுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
விழாவில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும் முதல்வர் பேசுகிறார். இதையொட்டி, விழா நடைபெறும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளைசுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: முதல்வர் ஸ்டாலின், 11-ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, பவானி வழியாக சேலத்துக்கு அன்று மாலை 5 மணிக்கு வருகிறார். சேலம் மாவட்ட எல்லையான நவப்பட்டி பெரும்பள்ளம் பகுதியில் திமுக தொண்டர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அங்கிருந்து 11 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் ரோடு ஷோவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்கள், கட்சியினரை சந்திக்கிறார். இரவு மேட்டூர் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். பின்னர், மேச்சேரி, ஓமலூர் வழியாக சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வந்து, பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மதிய உணவு முடித்துக் கொண்டு சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தனது இருப்பைக் காட்டிக்கொள்ள ஏதாவது ஒன்றை கூறி வருகிறார். தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகர் நல அலுவலர் முரளிசங்கர், காவல் துணை ஆணையர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT