Published : 10 Jun 2025 05:34 AM
Last Updated : 10 Jun 2025 05:34 AM
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஜூன் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அதை ரத்து செய்து அறுபடை வீடுகளின் மாதிரி கோயில் அமைக்கவும், பூஜைகள் நடத்தவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது நீதிபதி, ‘‘முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டு வழிபட ஆகம விதிகள் அனுமதிக்கிறதா?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில், ‘‘ஆகம விதிகளின்படியே அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை, மாலையில் தலா 2 மணி நேரம் பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், ‘‘மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் குறித்து கேள்வி கேட்டதற்கு, மாநாட்டில் ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்போர் குறித்த விபரத்தில் ஒரு இடத்தில் 20 ஆயிரம் என்றும், மற்றொரு பக்கத்தில் 5 லட்சம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள். பெங்களூரு நகரில் சமீபத்தில் கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்தது போல் நிகழ்ந்து விடக்கூடாது’’ என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, ‘‘முருக பக்தர்கள் மாநாட்டில் எவ்வளவு பேர் கலந்துகொள்கின்றனர் என்பது குறித்த விவரங்களை வழங்கினால்தான் போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க முடியும். எனவே மாநாட்டுக்கு அனுமதி கோரிய பிரதான மனு தொடர்பாக போலீஸார் கேட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை மனுதாரர் அளிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் போலீஸார் 2 நாட்களில் முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பூஜைகள் செய்யக்கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT