வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை தேவை: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை தேவை: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் கடந்த மாதம் 26-ம் தேதி பிறப்பித்துள்ளார். ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறிய நிலையில், அந்த அறிவிப்புக்கு மாறாக, இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என அறிய விரும்புகிறோம்.

வேளாண்மை என்பது இயற்கையை சார்ந்த தொழிலாகும். போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கும் வரை, விவசாயிகள் மட்டுமல்ல அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் படும் துன்பங்கள் மாளாது. இப்படியான பாதிப்புகள் மிக கூடுதலாகி வரும் நிலையில், சிபில் ஸ்கோர் தகுதியை அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்க கூடாது.

கடன் பெற்றோர் அக்கடனை திருப்பி செலுத்திய முறைகளை கணக்கீடாக கொண்ட சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடு தான், விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாக கொண்டு தீர்மானிக்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in