Published : 09 Jun 2025 07:24 PM
Last Updated : 09 Jun 2025 07:24 PM
சென்னை: “நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில், புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும், இல்லாவிடில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நான்காண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். மக்களின் எண்ணங்களுக்கு வடிகாலாக அதிமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. திமுக ஸ்டாலின் மாடல் அரசு, நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம், உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் மட்டத்தில் இருந்து மேற்கே 7.88 கி.மீ. தொலைவில் புதிய கடைமடை இயக்க அணை (ரெகுலேட்டர்) ஒன்றை சுமார் 49.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு 2.2.2025 அன்று அடிக்கல் நாட்டியது.
2019-ம் ஆண்டு எனது தலைமையிலான அதிமுக அரசில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதே உத்தமசோழபுரம் ஊராட்சியில் 3 கி.மீ. தாண்டி பூதங்குடி என்ற இடத்தில் புதிய கடைமடை இயக்க அணை - ரெகுலேட்டர் கட்ட திட்டமிடப்பட்டது. இங்கு ரெகுலேட்டர் கட்டுவதால், வளப்பாறு மற்றும் தேவநதி ஆகிய இரண்டு கிளை நதிகள் மற்றும் 28 சிறு வடிகால்கள் மற்றும் உத்தமசோழபுரம், நரிமணம், வடகரை, பூதங்குடி, பாலக்காடு, வடகுடி, பெருங்கடம்பனூர், கோகூர் உள்ளிட்ட 32 கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாதுகாக்கப்படுவதுடன், 32 கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். கரோனா நோய்த் தொற்றின் காரணமாக அதிமுக அரசு திட்டமிட்டிருந்தபடி இங்கு ரெகுலேட்டர் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
2021-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒருசில திமுக நிர்வாகிகளின் சுயநலத்துக்காகவும், அங்குள்ள தனியார் இறால் பண்ணையாளர்கள் மற்றும் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சாதகமாக, அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டத்துக்குப் பதிலாக, புதிய இடத்தில் சுமார் 49.50 கோடி ரூபாய் மதிப்பில் ரெகுலேட்டர் அமைக்க நிர்வாகத் திறனற்ற திமுக அரசு 2.2.2025 அன்று அடிக்கல் நாட்டியுள்ளது.
ரெகுலேட்டர் அமையும் இடமாற்றத்தை அறிந்த 32 கிராம மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளுக்கு இந்த நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும், அதிமுக சார்பிலும், 21.5.2025 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டதுடன், ஆளும் திமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து 22.5.2025 அன்று போராட்டக் குழுவினர் ஜனநாயக முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முற்படுகையில், காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, 26.5.2025 அன்று ஒப்பாரி போரட்டம் நடத்தப்பட்டது. இன்றுவரை 32 கிராம மக்களும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சில தனியாரின் நலனுக்காக இந்த அரசு தேவையில்லாத இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அனைவரும் கட்சி பேதமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை வேடிக்கை பார்த்து வருவது, ஸ்டாலின் மாடல் அரசின் தான்தோன்றித்தனத்தையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற செயல்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு, தன் குடும்ப மக்களின் நலனில் மட்டுமே குறியாக இருக்கும் திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின், உடனடியாக நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரம் கிராமத்தில், புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, எங்களது ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT