60% பேர் அதீத வெப்பம் சார்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்: ஆய்வில் தகவல்

60% பேர் அதீத வெப்பம் சார்ந்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்: ஆய்வில் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பருவகாலங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகளை எதிர்கொள்ளுதல், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி - பதில் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமையிலான குழுவினர் 3,217 பேரிடம் அத்தகைய ஆய்வை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்ததாவது: சமூகத்தில் வெப்ப வாதம் மற்றும் அதுசார்ந்த பாதிப்புகள் குறித்த புரிதல் எந்த அளவு உள்ளது என்பதை அறிய இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. 60 சதவீதம் பேர் அதீத வெப்பம் சார்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். பருவநிலை மாற்றம் மற்றும் திடீரென அதிகரிக்கும் கோடை வெப்ப சூழல்களால் நீர்ச்சத்து இழப்பு, வெப்ப வாத பாதிப்புகளுக்கு 46 சதவீதம் பேர் உள்ளாகின்றனர்.

80 சதவீதம் பேர் வெப்ப நிலை அதிகரிக்க பருவநிலை மாற்றங்களே பிரதான காரணம் என அறிந்துள்ளனர். ஆனால், அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் அவர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே வெப்ப வாதத்தின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகளை உணர்ந்திருக்கின்றனர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேருக்கு அதீத வெப்பத்தை எதிர்கொள்வதற்கான மாற்று இடங்களோ, குளிர்வான இடங்களோ இல்லை. அதேபோல், வெப்ப அலை தொடர்பான வெளியிடப்படும் அறிவுரைகள் 29 சதவீதம் பேருக்கு புரிவதில்லை. ஏழை, எளிய மக்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வெப்ப அலை பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. தடையற்ற மின்சாரம், குடிநீர் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்யமுடியவில்லை.

இதுதொடர்பாக துணைவேந்தர் மருத்துவர் நாராயணசாமி கூறுகையில், “பொது மக்களிடையே, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான அடிப்படை வசதிகளை உறுதிபடுத்த வேண்டிய நிலை இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in