Last Updated : 02 Jul, 2018 03:58 PM

 

Published : 02 Jul 2018 03:58 PM
Last Updated : 02 Jul 2018 03:58 PM

புதுச்சேரியில் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஜூன் 4-ம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டினார். ஆனால் அப்போது பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. இதனால் 4 மற்றும் 5-ம் தேதி கடந்த மார்ச் மாதத்தில் ஆளுநர் ஆற்றிய உரையின் மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து, சட்டப்பேரவை காலவரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பட்ஜெட்டுக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி அனுமதி பெற்றார். ஆனால் அதன்பின்னர் சபாநாயகர், அமைச்சர்கள், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் உடனடியாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூடியது. ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து பேசத் தொடங்கினர். அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களைக் காண்பித்தனர். பிறகு சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்றனர். இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் எழுந்து பேசத் தொடங்கினார். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.

எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி கூறுகையில், “கடந்த பட்ஜெட்டில் அறிவித்ததை புதுச்சேரி அரசு செய்யவில்லை. மாநில அந்தஸ்தே எங்கள் நிலை. சிறப்பு மாநில அந்தஸ்து என்பது கிடைக்காத ஒன்று” என்று குறிப்பிட்டார்.

அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் கூறுகையில், “பட்ஜெட் போட முடியாமல் இருந்த இந்த அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்றார்.

பின்னர் சபாநாயகர் அறைக்குச் சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். “பட்ஜெட் நகலை உறுப்பினர்களுக்கு தராததால் சபாநாயகர் அறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர். அதே நேரத்தில் பேரவையில் அனைத்து எம்எல்ஏக்கள் இருக்கையிலும் பட்ஜெட் புத்தகத்தை வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x