Published : 11 Jul 2018 02:42 PM
Last Updated : 11 Jul 2018 02:42 PM

கோயில் சிலைகள் திருட்டுபோவதை வேடிக்கை பார்க்க மாட்டோம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

கோயில் சிலைகள் காணாமல் போவது, கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகளை பாதுகாப்பது தொடர்பாகவும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு செய்து தரவேண்டிய வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

வழக்கில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகததால் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாதேவன் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராகும்போது அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதால் அவகாசம் கேட்டார். இதையடுத்து வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி மகாதேவன் ஒத்தி வைத்தார்.

அப்போது எதிர்மனுதாரரான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே அண்ணாமலையார் பஞ்சலோக சிலை மாயமானதாகவும், ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் காணாமல் போனதாகவும் சில சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், மர வேலைப்பாடுகள் அழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

சிலை கடத்தல் குறித்த வழக்கின்  விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தினந்தோறும் சிலைகள் மாயமாகி வருவதை உயர் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைத் திருட்டு என்பது தொடர்கிறது. தமிழகத்தில் சிலைத் திருட்டு தொடர்வது என்பது தமிழக அரசு, இந்து அறநிலைத்துறை நிர்வாகத்தின் மோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது. சிறிய கோயில், பெரிய கோயில் என்பது பிரச்சினை இல்லை. சிலைகள் மக்களின் நம்பிக்கை.

தொடர்ந்து சிலைகள் திருடப்படும்போது அதுகுறித்த புகார்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் மகாராஜனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஸ்ட்ராங் ரூம் அமைக்க இன்று அட்டவணை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. சிலைகளை பாதுகாக்க களம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் இன்று அட்டவணை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரும் , சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியும் வராததால் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையை எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x