Published : 09 Jun 2025 04:54 AM
Last Updated : 09 Jun 2025 04:54 AM

டிக்கெட் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பயணிகளுக்கு அரை மணி​ நேரத்தில் பணம் திரும்ப வரும்

சென்னை: பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில்லறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையடுத்து, யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தும் வகையிலான பயணச்சீட்டு கருவிகளை பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் பயணச்சீட்டு கருவி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

எனினும், தொலைதொடர்பு சிக்கலால் சில நேரங்களில் பரிவர்த்தனையை முடிக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால், நடத்துநருக்கும், பயணிகளுக்கும் இடையே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதற்கு தீர்வு காண தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: யுபிஐ முறையில் பயணிகளுக்கு பணம் திருப்பி கிடைப்பதில் தாமதம் ஆகிறது. இதை தவிர்க்கும் வகையில், ‘யுபிஐ ஆட்டோ ரீஃபண்ட்’ வசதியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்துக்குள் பயணியின் வங்கி கணக்குக்கு தொகை திரும்பி வந்துவிடும். எனவே, நடத்துநர்கள் அச்சமின்றி டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கான உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x