Published : 09 Jun 2025 04:31 AM
Last Updated : 09 Jun 2025 04:31 AM
சென்னை: சென்னையில் தங்கியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேற்றும் சந்தித்துப் பேசினார். யாருடன் கூட்டணி என்பது 2 அல்லது 3 மாதங்களில் தெரியவரும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பின்னணியில் சில தினங்களுக்கு முன்பு தைலாபுரத்தில் ராமதாஸை அன்புமணியும் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் சந்தித்து பேசினர்.
இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேபோல், கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்த முகுந்தனும் ராமதாஸை சந்தித்தார்.
இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நல்ல செய்திகள் விரைவில் வரும். அரசியலுக்கு வயது கிடையாது. கருணாநிதி 94 வயது வரை அரசியலில் இருந்தார். அவர் சக்கர நாற்காலியில் இருந்து முதல்வராக இருந்தார். எல்லா தலைவர்களையும் நேசிப்பவன்.
பல பிரதமர்களுடன் தொடர்பில் இருந்தவன். பிரதமர் நரேந்திர மோடி எனக்கு நெருங்கிய நண்பர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் சந்தித்ததில்லை. அவரை பற்றி கேள்விப்பட்டியிருக்கிறேன். அவரும், இந்தியாவை உலக அளவில் முதல் இடத்துக்கு கொண்டு செல்ல செயல்படுகிறார். தமிழகம் வந்துள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
பாமகவில் நிலவும் கருத்துவேறுபாட்டால் தொண்டர்கள் சோர்வு அடைய மாட்டார்கள். நல்ல செய்தி வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு. அந்த நல்ல செய்தி விரைவில் வரும். எங்கிருந்து வரும் என்பதை சொல்ல முடியாது. கூட்டணி யாரோடு, எப்போது, எப்படி, ஏன் என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. 2, 3 மாதங்களில் தெரியவரும்.
நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். ஆடிட்டர் குருமூர்த்தியை தைலாபுரத்திலும், இங்கேயேயும் சந்தித்து பேசினேன். தைலாபுரத்தில் அன்புமணியை சந்தித்து பேசியது பற்றி சொல்லக் கூடாது. அது ரகசியம். முகுந்தன் வந்தார், தாத்தாவை பார்த்துவிட்டு சென்றார். யாருக்கு எப்போது வாய்ப்பு வரும் என்று சொல்ல முடியாது. மீண்டும் முகுந்தன் கட்சிக்குள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. அரசியல் என்பது நீண்ட நெடிய பயணம். அதில், அவ்வப்போது எல்லாம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT