Published : 09 Jun 2025 04:17 AM
Last Updated : 09 Jun 2025 04:17 AM

பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் திமுக அரசின் திட்டங்கள்: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் மாபெரும் திட்டங்களால் தமிழகம் அதிவேகமாக நகரமாயமாகி சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், திமுக அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகரமயமாகி வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.582 கோடி, பொதுமக்கள் பங்களிப்பு ரூ.183.56 கோடியும் சேர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுவரை அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் 3 கட்டங்களில் ரூ.6,655.80 கோடியில் 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10,639.80 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி நகராட்சிகளில் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின்கீழ் 28 புதிய பேருந்து நிலையப் பணிகள் ரூ.968.08 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 23 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் 3 லட்சத்து 65,555 எண்ணிக்கையிலான தெருவிளக்குகள் மற்றும் புதிதாக 1 லட்சத்து 11,327 எல்இடி தெரு விளக்குகளும் ரூ.577.28 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 98 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.196.56 கோடி மதிப்பீட்டில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டுவதற்கு அனுமதித்து, முதற்கட்டமாக 71 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சிகளில் ரூ.102.30 கோடியில் 231 புதிய வகுப்பறைகளும், நகராட்சிகளில் ரூ.118.80 கோடியில் 281 புதிய வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 176 பணிகள் முடிவடைந்துள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 109.094 கி.மீ. நீளத்துக்கு ரூ.270.83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன.

மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்பட்டு, மாநகராட்சிகளில் 10,283 மனுக்களில் 99.97 சதவீதம், நகராட்சிகளில் 34,385 மனுக்களில் 99.91 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 98.3 சதவீத மனுக்களும் நகராட்சிகளில் 97.4சதவீத மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 4 ஆண்டுகளில் பேரூராட்சிகளில் ரூ.1,570.84 கோடி மதிப்பீட்டில் 2,937 பணிகளும் ரூ.3057.74 கோடியிலும் 8,065 சாலைப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், ரூ.4,198.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, ரூ.6829.26 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தொடர் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழகம் அதிவேகமாக நகரமாயமாகி இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. திமுக அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டத்தக்கவையாக அமைந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x