Published : 08 Jun 2025 11:00 PM
Last Updated : 08 Jun 2025 11:00 PM
மதுரை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் கூறப்பட்டபோதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.
மதுரை ஒத்தக்கடையில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமித்ஷா உட்பட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடும் போது நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக எழுந்து துண்டை சுழற்றியபடி விசில் எழுப்பினர். அண்ணாமலை பேசும் போது அப்படியே செய்தனர். அமைதியாக இருக்கும்படி அண்ணாமலை கூறியதும் விசில் சப்தம் நின்றது.
பாஜக நிர்வாகிகள் மாநாடு என்பதால் அமித்ஷா வந்ததும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறி விட வேண்டும் என ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அமித்ஷா வந்ததும் ஊடகங்கள் வெளியேறுமாறு பாஜக பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஊடகத்தினர் வெளியேற வேண்டாம். கூட்டம் முடியும் வரை உள்ளே இருக்கலாம் எனக் கூறினார். இதையடுத்து ஊடகத்தினர் கூட்டம் முழுவதும் பங்கேற்றனர்.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தால் ஒத்தக்கடை பகுதியில் விவசாய கல்லூரி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் வந்தேமாதரம், அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அமித்ஷாவுக்கு முருகன் சிலையும், வேலும் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்தும் நிர்வாகிகளுக்கு புளியோதரை வழங்கப்பட்டது. கூட்டத்துக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அமித்ஷா, பாரதமாத சிலைகளுடன் முகப்பும் அமைக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT