Published : 08 Jun 2025 11:33 AM
Last Updated : 08 Jun 2025 11:33 AM
சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையத்தை திறந்தால் அதற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மத்திய அரசிடம் இருந்து சில பிரத்யேக ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயனிகளை கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் 3.5 கோடி என்ற நிலையை எட்டும் வரையிலான காலத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற முக்கிய நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னை விமான நிலையத்துக்கு அருகிலேயே 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யலாம் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியபோது அந்நிலத்தை கையகப்படுத்துவதற்கான செலவு அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. செலவு குறையும் என்ற காரணம் காட்டி பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசு இதுபோன்ற நிபந்தனைகளை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்று போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து போராட்டக் குழுவின் செயலர் சுப்பிரமணி கூறும்போது, “சென்னை மட்டுமல்லாமல் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பன்னாட்டு விமான நிலையங்களும், சேலம், தூத்துக்குடி போன்ற உள்நாட்டு விமான நிலையங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. பலர் அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக விமானங்களில் செல்லும் வாய்ப்பு, இனிவரும் காலத்தில் அதிகரிக்கும். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி என்ற பயணிகள் இலக்கை எட்டுவது என்பது இயலாத காரியம். இந்த நிபந்தனையுடன் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தேவையற்றது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.
மேலும் போராட்டக் குழுவினர் கூறும்போது, “இந்த விமான நிலையம் அமைப்பது தொடர்பான வழிநடத்துதல் குழுக் கூட்டத்தில் வெள்ள அபாயம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மச்சேந்திர நாதன் குழு அறிக்கை அடிப்படையில் வடிகால் அமைப்பது, வாய்க்கால்களை மாற்றி அமைப்பது தொடர்பான நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியுள்ளதும் பூவுலவின் நண்பர்கள் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மச்சேந்திர நாதன் குழு பரிந்துரை: இந்த மச்சேந்திர நாதன் குழுவின் பரிந்துரையை வெளியிட வேண்டும் என்று ஏற்கெனவே பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT