Published : 08 Jun 2025 06:39 AM
Last Updated : 08 Jun 2025 06:39 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரைக்கு வந்தார். இன்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் நி்ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 8) நடைபெறுகிறது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பேராசிரியர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி விமானத்தில் உள்துறை அமித்ஷா மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவரது வருகையையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், மதுரை சுற்றுச்சாலையில் சிந்தாமணி பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.
இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அமித்ஷா, பின்னர் ஹோட்டலுக்கு திரும்புகிறார். அங்கு தமிழக பாஜக மையக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம், பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பின்னர் பிற்பகல் 3 மணியளவில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு ஆலோசனை வழங்குகிறார். இதில் மண்டல அளவிலான நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பதில் தரும் வகையில் அமித்ஷாவின் பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் மதுரை வருகையையொட்டி விமான நிலையம், அவர் தங்கும் தனியார் ஹோட்டல், மீனாட்சி அம்மன் கோயில், ஒத்தக்கடையில் நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் உள்ளிட்ட இடங்களில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT