Published : 08 Jun 2025 03:19 AM
Last Updated : 08 Jun 2025 03:19 AM

தொகுதி மறுவரையறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் கட்சிகளை கலந்து பேசாமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாநிலத்துக்கு மாநிலம் பாஜக மதவாத அரசியல் வடிவத்தை மாற்றி கையிலெடுக்கும். வட இந்தியாவில் விநாயகர், ராமர் அரசியலையும், மேற்கு வங்கத்தில் துர்கா, காளி அரசியலையும் முன்னெடுக்கிறார்கள். தமிழகத்தில் முருகனை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுத்திகளில் ஒன்று.

ஆனால், பிற மாநிலங்களில் மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்குவதைப்போல, தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் மக்கள் மயங்கமாட்டார்கள். தமிழ்க் கடவுள் முருகனும் மயங்காட்டார். அவர் மதவாத சக்திகளை விரட்டியடிக்கக் கூடியவர். அவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முருகன் உறுதிப்படுத்துவார். அவர்கள் எந்த மாநாட்டை நடத்தினாலும் தமிழகத்தில் எடுபடாது.

2031-ல்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற நிலை இருந்தது. நல்ல வேளையாக பாஜக ஆட்சியில் இருக்கும்போதே, 2027-ல் கணக்கெடுப்பைத் தொடங்குகிறார்கள். 2029-ம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலை கணக்கில் வைத்து அவர்கள் இந்நடவடிக்கையை முன்னெடுக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதையும் வரவேற்கிறோம்.

அதன் பிறகு மேற்கொள்ளப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்து வலுவாக உள்ளது. அதனடிப்படையில் முதல்வர் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தி, தென் மாநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார். அவரது கருத்தை விசிக ஆதரிக்கிறது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளை கலந்துபேசாமல் மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x