Published : 08 Jun 2025 02:42 AM
Last Updated : 08 Jun 2025 02:42 AM
தமிழகத்தில் இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 10-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், 11-ம் தேதி கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், 13-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், மதுரை மாவட்டம் புலிப்பட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீ., மதுரை மாவட்டம் சாத்தியார், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, மதுரை மாவட்டம் கள்ளந்திரி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT