Published : 07 Jun 2025 08:51 PM
Last Updated : 07 Jun 2025 08:51 PM
கோவை: “திமுக அரசானது முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்பியுள்ளார். முதல்வர்தான் அரசை நடத்துகிறாரா? தம்பிகள்தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலை உள்ளது. இந்த தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசை குறை சொல்வதை முதல்வர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை. ஆனால், பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவிருக்கிறார்கள். பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருந்து கொண்டிருக்கிறார். இங்கு போலி சமூக நீதி பேசிக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் மறுசீரமைப்பு விவகாரத்தில் இல்லாத விஷயத்தை திசை திருப்பி வருகிறார்.
யாருக்கும், எந்த மாநிலத்துக்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் கோவை வந்தபோதும், மறுசீரமைப்பு யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் மறுசீரமைப்பாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல் பேசி, மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இதை விட்டுவிட்டு முதல்வர் அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்.
திமுக அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனைக் கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக இந்த மாநாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். தமிழ்க் கடவுள் முருகன் மாநாட்டினை இங்கு நடத்துவதுதான் சரியானது” என்று அவர் கூறினார்.
மேலும், அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக, பாமக உள்ளனரா, வருகிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “பாஜக கூட்டணி குறித்தான முடிவுகளை தேசிய தலைமை எடுக்கும். கூட்டணி உங்கள் முன்பு தான் முடிவு எடுக்கப்படும். கூட்டணியில் சஸ்பென்ஸ் இருக்கிறது, கொஞ்சம் காத்திருங்கள். தமிழகத்தில் அரக்கர்கள் ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நம்முடைய எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT