பாளை.யில் ரூ.100 கோடியில் ‘காயிதே மில்லத் நூலகம்’ அமையும் இடத்தில் ஆய்வு

பாளை.யில் ரூ.100 கோடியில் ‘காயிதே மில்லத் நூலகம்’ அமையும் இடத்தில் ஆய்வு
Updated on
1 min read

நெல்லை: பாளையங்கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் அமையவுள்ள இடத்தை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் நெல்லையில் நவீன நூலகம் கட்டப்படும் என்றும், அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று கடந்த மாதம் 9-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் அறிவித்தார். நூலகம் அமைக்க பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து பொது நூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர் கூறும்போது, “இந்த நூலகம் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமையும். கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நூலகத்தில் தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்களில் மினி திரையரங்கம், ஆடிட்டோரியம், மாற்றுத் திறனாளிகளுக்கான தனி அறை, மாநாட்டு கூடம் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும். 1 லட்சம் புத்தகங்களுடன் இந்த நூலகம் அமையவுள்ளது” என்றார். ஆய்வின்போது, கண்காணிப்புப் பொறியாளர் (கட்டிடங்கள்) ஸ்ரீதரன், உதவி செயற்பொறியாளர் தினேஷ், மாவட்ட பொது நூலகர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in