Published : 07 Jun 2025 07:08 PM
Last Updated : 07 Jun 2025 07:08 PM
சென்னை: பிளஸ் 1 சேர்க்கைக்கு அரசு பள்ளிகளை அணுகும் மாணவ, மாணவிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயில சேர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையின் கல்விக்காக தமிழ்நாடு அரசு காலை உணவுத் திட்டம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இடைநிற்றல் பெருமளவு குறைந்து இருப்பதும், உயர்கல்வி சேர்க்கையில் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர் தேர்ச்சியில் 241 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளது. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அரசு பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிளஸ் 1 சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் அரசு மேல்நிலைப் பள்ளிகளை அணுகும் போது, அவர்களது மதிப்பெண்களை பார்த்து, நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உயர் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே சேர்க்க முடியும் என்ற நிலை அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது. பள்ளி மாணவர் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
தனியார் பள்ளிகள் சுய லாபம் தேடும் முயற்சியில் பரபரப்பான விளம்பரங்களை வெளியிட்டு, உயர் மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே சேர்த்து வரும் முறை அரசுப் பள்ளிகளை தொற்றிக் கொள்ளும் முன்பு தமிழ்நாடு அரசு உடனடியாக தடுக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை உயர் மதிப்பெண் பெறும் அளவில் உயர்த்துவதில் தான் கற்பிக்கும் திறன் மதிப்பிட வேண்டியது அவசியமாகும்.
வெறும் 100 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கை மட்டும் கொண்டு கற்பிக்கும் திறனை தீர்மானிக்கக் கூடாது என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டி, பிளஸ் 1 சேர்க்கைக்கு அரசு பள்ளிகளை அணுகும் மாணவ, மாணவிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT