Published : 07 Jun 2025 05:33 PM
Last Updated : 07 Jun 2025 05:33 PM

கயத்தாறு அருகே உபமின் நிலைய மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து: பல மணி நேரம் போராடி தீயணைப்பு

கோவில்பட்டி: கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராமம் உபமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பயங்கர தீ 7 இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்டிகள் மூலமும், மண் கொண்டும் பல மணி நேரம் போராடி தீயணைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் அய்யனார்ஊத்தில் தமிழக மின்சார வாரியத்துக்கு சொந்தமான உபமின் நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 400/230 110 கி.வோ. செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த உபமின் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென கசிவு ஏற்பட்டது. ஒரு மின்மாற்றி 70 ஆயிரம் லிட்டர் ஆயில் கொள்ளளவு கொண்டது. இதனால், மின்மாற்றியில் ஏறபட்ட தீ மளமளவெனப் பரவியது. இதனால் அங்கு செயல்படும் மற்ற மற்ற மின்மாற்றிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கரும்புகை அதிகளவு வெளியேறி புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் அறிந்து கோவில்பட்டி, கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. மேலும், தனியார் நிறுவனங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மின்மாற்றியில் ஆயில் உள்ளதால், அதன் வெப்பம் அதிகரித்து வெடித்து விடாத வண்ணம் நுரை தீயணைப்பான் (Foam) கொண்டு அதனை குளிரூட்டி தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ கொஞ்சம் கட்டுக்குள் வந்ததும், ஜேசிபி இயந்திரம் மூலம் மண் கொட்டி தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

தகவல் அறிந்து வட்டாட்சியர் சுந்தர ராகவன், காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், “பணிக்கர்குளம் உப மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் nitrogen suppression system பொருத்தி உள்ளனர். இது வேலை செய்யவில்லை. காலை 6 மணிக்கு தீயணைக்கும் பணி தொடங்கியது. மேலும், தனியார் நிறுவனங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இங்கு மொத்தம் 4 மின்மாற்றி அலகுகள் உள்ளன. ஒரு மின்மாற்றியில் தீப்பிடித்தது எரிந்தது. அது மற்றவைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு கிடையாது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x