Last Updated : 07 Jun, 2025 12:48 PM

 

Published : 07 Jun 2025 12:48 PM
Last Updated : 07 Jun 2025 12:48 PM

நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் கூடுதல் கட்டமைப்பு: அன்புமணி வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. எனவே, கொள்முதல் நிலையங்களிலும், கிடங்குகளிலும் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் கடந்த ஐந்தாண்டுகளில் சேதமடைந்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கூட ஏற்படுத்தாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடிப்பது கண்டிக்கத்தக்கது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 2019-20ஆம் ஆண்டில் தொடங்கி 2023-24ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா 1.25 லட்சம் டன் வரை நெல்/அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருக்கின்றன என்று ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

ஐந்தாண்டுகளில் இவ்வாறு சேதமடைந்த நெல்/அரிசியின் மதிப்பு மட்டும் ரூ. 840 கோடி. சேதத்தின் மதிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுமையாக தெரிவிக்க வில்லை. முழுமையான பாதிப்பு தெரிய வந்தால் சேதத்தின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுத்த சில நாள்களுக்கு சேமித்து வைக்க இட வசதி இல்லாதது, நெல் சேமிப்புக் கிடங்குகளில் கூரைகள் ஒழுகுவது, சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது, எலித் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படாதது போன்றவை தான் நெல் மூட்டைகள் சேதமடைவதற்கு காரணம் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு மட்டும் தான் இப்போது வெளியாகியுள்ளது. உண்மையில் பல பத்தாண்டுகளாக நெல் மூட்டைகள் சேதமடைவதும் , நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் ஒருபுறம் இருக்க, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதும் ஆண்டுதோறும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் தவறிய தமிழக ஆட்சியாளர்கள் தான் இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் 308 கிடங்குகள் மட்டுமே உள்ளன. அவை போதுமானவை அல்ல என்பதாலும், கொள்முதல் செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும் என்பதாலும், கிடங்குகளின் எண்ணிக்கையை 600ஆக உயர்த்த வேண்டும்.

நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1000 டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இத்தகைய ஆக்கப்பூர்வமான யோசனைகளை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கிடங்குகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் வைத்துக் கொண்டால், இழப்பான தொகையைக் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.66 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க முடியும்.

ஆனால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்க மறுக்கும் தமிழக அரசு, அந்த தொகையை வீணடிக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் கொள்முதல் நிலையங்களிலும், கிடங்குகளிலும் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமித்து வைப்பதற்கு வசதியாக கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x