Published : 07 Jun 2025 06:22 AM
Last Updated : 07 Jun 2025 06:22 AM
சென்னை: ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், ரயில் பயணத்தின்போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
நீண்டதூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர், இதனால் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இருப்பினும் ஆன்லைனில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடும் பிரயத்தனமாக உள்ளது. முன்பதிவு ஆரம்பித்த சில நொடிகளிலேயே ‘கன்பார்ம்’ டிக்கெட் முடிந்து ‘வெயிட்டிங்’ லிஸ்ட்டுக்கு சென்று விடுகிறது. மேலும் தொழில்நுட்ப காரணங்களாலும் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இவற்றை ஆய்வு செய்து களைய உரிய நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டன.
அதேபோல் டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பல மணி நேரத்துக்கு முன்பாகவே காத்திருந்து வரிசையில் நின்றாலும் 90 சதவீத பேருக்கு டிக்கெட் கிடைப்பது இல்லை. இதுதொடர்பாகவும் ரயில்வே துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டு வந்தன.
அதைத்தொடர்ந்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக, 2.5 கோடி போலி கணக்குகளை அண்மையில் கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது.
இதற்கிடையே, தட்கல் டிக்கெட்களை மக்கள் எளிதாகப் பெறும் வகையில் விரைவில் ஆதார் அங்கீகார முறை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதன்மூலம், பயணிகள் எளிதாக தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும், இந்தப்பணியை சிஆர்ஐஎஸ் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தட்கல் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது, தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ஆதார் எண் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதனை அடுத்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்ப்பு நடத்தப்பட்ட பிறகு பின்னர்தான் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்ற வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், ஆதார் எண் இணைக்கும் பயனருக்கு மற்ற பயனர்களைக் காட்டிலும் 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முகவர்களால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது. இந்த புதிய நடைமுறை இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே வாரியம் உத்தரவு
இதற்கிடையே, ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டை வேறு பெயரில் பதிவு செய்து, போலி ஆதார் அட்டைகளை தயார் செய்து தந்து, பயண ஏற்பாடுகளை ஏஜென்ட்கள் செய்வதாக ரயில்வே சந்தேகிக்கிறது. எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது, அடையாள அட்டையாக ஆதார் கொடுக்கும்பட்சத்தில், அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, தூய்மை பணியாளர்கள் (ஒப்பந்த பணியாளர்கள்) போர்வையில் சீருடை அணிந்து டிக்கெட் இன்றி சிலர் பயணம் செய்வதாகவும் ரயில்வே சந்தேகிக்கிறது. இதனால், அவர்களின் ஆதார் அட்டைகளையும் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT