மதுபான கொள்முதல், விற்பனை விவரங்களை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு    

மதுபான கொள்முதல், விற்பனை விவரங்களை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு    
Updated on
1 min read

மதுரை: மதுபான கொள்முதல், விற்பனை விவரங்களை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்றக் கோரி வழக்கில், அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் நிறுவனங்களின் விவரம், அதிக அளவில் விற்பனையான மதுபானத்தின் விவரம், விலை, உரிமக் கட்டணம், சிறப்புக் கட்டணம், வருவாய் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

ஆனால், 2016-2017-க்குப் பிறகு ஆண்டறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சில மது வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, ரசீது வழங்காமல் விற்பனை செய்வது, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து மட்டும் அதிக மது வகைகள் கொள்முதல் செய்யப்படுவது போன்ற விவரங்கள் தெரியவந்தன.

டாஸ்மாக் நிறுவனம் 11 நிறுவனங்களிடமிருந்து 125 வகையான மது வகைகளையும், 7 நிறுவனங்களிடமிருந்து 38 வகையான பீரையும் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்துதான் அதிக மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது. டாஸ்மாக் மது விற்பனையை அரசே மேற்கொள்வதால், மது விற்பனை விவரங்களை அறிய மக்களுக்கு முழு உரிமை உண்டு. போதுமான மது வகைகள் இல்லாததால், குறிப்பிட்ட வகை மதுவை மட்டுமே வாங்கி அருந்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. இது நுகர்வோர் உரிமைகளுக்கும் எதிரானது.

எனவே, டாஸ்மாக் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் மது வகைகள், விற்பனையாளர்கள், ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படும் மதுவில் அளவு, கொள்முதல் மற்றும் விற்பனை விலை, வருமானம் தொடர்பான வார மற்றும் மாத அறிக்கைகளை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், 2017 முதல் 2025 வரையிலான ஆண்டறிக்கையை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க உரிய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மனு தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in