“பாஜக எதிர்ப்பு அரசியலுக்காக ‘தொகுதி மறுவரையறை’ பூச்சாண்டி” - ஸ்டாலின் மீது எல்.முருகன் சாடல்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: “தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்" என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துவிட்டது. மத்திய அரசின் முயற்சியால் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகையைப் பெறவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பாஜக அரசின் சமூக நீதி சிந்தனைத் திட்டம்.

பிஹார் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்கள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. இது தொடர்பாக நான் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். அப்போதெல்லாம் தங்களால் ஆகாது என்று ஸ்டாலின் கைவிரித்து விட்டார். தற்போது, மத்திய அரசே அதனை செய்வதால், மீண்டும் தனது பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடத் தொடங்கி இருக்கிறார், தமிழக முதல்வர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். 2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்? இது என்ன பூச்சாண்டி? பொய் சொல்வதிலும் ஒரு பொருத்தம் வேண்டாமா?

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்தி விட்டார். மத்திய அரசின் சார்பிலும் பாஜக சார்பிலும் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. இல்லாத ஒன்றை, அறிவிக்காத ஒன்றை வைத்து விஷம பிரசாரத்தை திமுக செய்வது ஏன்?

கொடூர திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல இரண்டல்ல. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைக் கலாச்சாரம், பெண்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை, மதுவிற்பனையில் சாதனை, நாள் தவறாமல் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் என்று தமிழக மக்களின் துயரங்கள் தொடர்கின்றன. மது ஆலைகள் நடத்தும் திமுகவினர் தமிழக மக்களின் பணத்தைச் சுரண்டி, உடல்நலத்தைக் கெடுத்து, கொளுத்து வாழ்கின்றனர். உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் படும் துயரங்கள் ஏராளம்.

இந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணற்றவை.தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின்.

அவரது விஷம்ப் பிரசாரத்தை நம்ப தமிழக மக்கள் தயாரில்லை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கும் திமுக ஆட்சி எப்போது அகலும் என்பது தான் தமிழக மக்களின் தற்போதைய எண்ணமும் எதிர்பார்ப்பும்” என்று அவர் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் கூறுவது என்ன? > “நம் வாசற்படி வரை வந்தேவிட்டது தொகுதி மறுவரையறை ஆபத்து” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in