மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பாஜக சார்பில் தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் ஏரி பகுதியில் நேற்று நடந்தது. இதில் பாஜக தமிழக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு குப்பைகளை தொண்டர்களோடு சேர்ந்து அகற்றினர்.  | படம்: எம்.முத்துகணேஷ் |
உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி பாஜக சார்பில் தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் ஏரி பகுதியில் நேற்று நடந்தது. இதில் பாஜக தமிழக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு குப்பைகளை தொண்டர்களோடு சேர்ந்து அகற்றினர். | படம்: எம்.முத்துகணேஷ் |
Updated on
2 min read

தாம்பரம் / திருவள்ளூர் / மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏரிக்கரை பகுதியை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது அந்த காலங்களில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருந்தது. எல்லா மனிதர்களும் தனி மனித ஆயுள் என்பது நூறாண்டு காலம் இருந்தது. இன்று மனிதனுடைய ஆயுள் காலம் குறைந்துள்ளது அதற்கு காரணம் சுற்றுச்சூழல் தான்.

ஆகவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். எல்லோரும் மரம் நட வேண்டும். இறக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும். வயல்களில் ஆர்கானிக் உரம் இடவேண்டும். கெமிக்கல் உரங்களை தவிர்க்க வேண்டும். அனைத்து வகையிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு 11 ஆண்டுகள் ஆட்சியில் விவசாயிகளுக்கான ஆர்கானிக் உரம் போடுவதற்கு ஸ்வச் பாரத் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அனைவரும் வீட்டையும் நாட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

உள்ளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நமது ஆட்சியாளர்கள் அவர்களுடைய உள்ளங்களை தூய்மையாக வைத்துக் கொண்டு தமிழக மக்களுக்கு இன்னும் ஓராண்டு காலம் நல்லாட்சி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஸ்வச் பாரத் திட்டம் மட்டுமல்லாது, மத்திய அரசு எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் தமிழக அரசு அதற்கு எதிராகத்தான் இருக்கிறது. தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் . ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்த இப்பணியில் ஏராளமான மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் தாமோதரன், ஆட்சியரின் அலுவலக பொது மேலாளர் . விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் மல்லிகா, அங்கன்வாடி பணியாளர் சாந்தி. ஆசிரியர் தி.உஷா, மாணவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in