Published : 06 Jun 2025 05:35 AM
Last Updated : 06 Jun 2025 05:35 AM

ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு: நிர்வாகிகள், குடும்பத்தினரின் சமாதான முயற்சி தோல்வி

ராமதாஸ், அன்புமணி

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார். அதேநேரத்தில், சென்னை சோழிங்கநல்லூரில் தனது ஆதரவாளர்களுடன் அன்புமணி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். ராமதாஸால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் அதே பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்று அறிவித்த அன்புமணி, ‘‘உங்களை யாராலும் மாற்ற முடியாது. கட்சியின் தலைவருக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த மே 16-ம் தேதி முதலே நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல, சென்னையில் மாவட்ட நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து வருகிறார். தந்தையும், மகனும் இவ்வாறு தனித்தனி அணியாக செயல்பட்டு வருவது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சலசலப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், குடும்ப உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

‘நான் பொதுக்குழு மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன். எனவே, பொதுக்குழு நினைத்தால்தான் என்னை நீக்க முடியும்’ என்று அன்புமணி தொடர்ந்து கூறிவருகிறார். இந்த நிலையில், அவரது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் ராமதாஸ் தயாராகி வருகிறார். அன்புமணிக்காக தன்னைவிட்டு பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கவும் ராமதாஸ் வியூகம் வகுத்துள்ளார். இதன்படியே, தவாக தலைவர் வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரான திருமால்வளவனை வரவழைத்து ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி நேற்று காலை 9.10 மணிக்கு காரில் வந்தார். அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் உடன் வந்திருந்தார். அப்போது, ராமதாஸுடன் அன்புமணி பேசியதாக கூறப்படுகிறது. தைலாபுரம் வீட்டில் 50 நிமிடங்கள் இருந்த அன்புமணி, 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எனினும், குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அவர் சந்தித்ததாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அன்புமணியும் இதுகுறித்து எதுவும் கூறவில்லை. கார் கண்ணாடியை ஏற்றிவிட்டு, இறுகிய முகத்துடன் தைலாபுரத்தில் இருந்து அவர் வெளியேறினார். இருவருக்கும் சுமுக நிலையை ஏற்படுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்றே தெரிகிறது.

குருமூர்த்தி திடீர் சந்திப்பு ஏன்? - தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அன்புமணியின் கார் புறப்பட்டு சென்ற அடுத்த சில நிமிடங்களில், ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியும், சென்னை அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒரே காரில் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸுடன் அவர்கள் இருவரும் சுமார் 3 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர், நண்பகல் 1.15 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ராமதாஸ் உடனான திடீர் சந்திப்பு குறித்து குருமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘ராமதாஸ் எனது நீண்டகால நண்பர். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். நண்பர் என்ற அடிப்படையில்தான் வந்தேன். பாஜக சார்பில் வரவில்லை. தைலாபுரத்துக்கு அன்புமணி வந்து சென்றது எனக்கு தெரியாது’’ என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி மதுரைக்கு வர உள்ளார். அப்போது, பாமகவுடன் கூட்டணியை இறுதி செய்ய விரும்புவதால், கட்சி நிறுவனர் ராமதாஸை குருமூர்த்தி சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x