Published : 05 Jun 2025 08:41 PM
Last Updated : 05 Jun 2025 08:41 PM
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் இன்று (ஜூன் 5) ஓரே நாளில் வருகை புரிந்ததால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பாமகவில் ‘யார் அதிகாரமிக்கவர்’ என்ற போட்டி அரசியல் நிலவுகிறது. பாமக நிறுவனரான ராமதாஸ், தலைவர் என கூறிக்கொள்ளும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே பாமகவும், அக்கட்சியின் தொண்டர்களும் சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், குடும்பத்து உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். சுமுக முடிவு எட்ட பாஜகவும் களம் இறங்கியது.
அன்புமணி ஆதரவு பெற்ற பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி உள்ளார். இவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் 16-ம் தேதி முதல் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ராமதாஸ் ஆலோசித்து வருகிறார். இதேபோல், சென்னையில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அன்புமணியும் ஆலோசனை நடத்தி வருகின்றார்.பொதுக்குழு மூலம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனக் கூறி வரும் அன்புமணிக்கு ‘செக்’ வைக்கும் நடவடிக்கையாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் ராமதாஸ் தயாராகி வருகின்றார்.
மேலும், அன்புமணிக்காக தன்னைவிட்டு பிரிந்து சென்றவர்களையும் ஒருங்கிணைக்க ராமதாஸ் வியூகம் வகுத்துள்ளார். இதனால், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவரான திருமால்வளவனையும் வரவழைத்து ராமதாஸ் சந்தித்து பேசி உள்ளார். பின்னர் அவர் கூறும்போது, “தைலாபுரத்துக்கு தான் வந்துவிட்டு சென்றது தெரிந்ததும் அன்புமணி வந்து ராமதாஸை சந்தித்து விடுவார்,” என்றார்.
இதனை மெய்பிக்கும் வகையில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு அன்புமணி ராமதாஸ் இன்று ( ஜூன் 5) காலை 9.10 மணிக்கு காரில் வருகை தந்தார். அவருடன், அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் வந்திருந்தர். தைலாபுரம் வீட்டில் 50 நிமிடங்கள் இருந்தவர், காலை 10 மணிக்கு வெளியேறினார். ராமதாஸை சந்தித்து பேசியதாக ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், குடும்ப உறுப்பினர்களை மட்டும் சந்தித்துவிட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. அன்புமணியின் வருகைக்கு காரணம் என்ன? ராமதாஸை சந்தித்து பேசினாரா? போன்ற தகவல்களை இரண்டு தரப்பும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அன்புமணி வெளியேறியபோது, அவரது முகம் மகிழ்ச்சியாக இல்லை.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக அன்புமணியின் கார் சென்றதும், சென்னையில் இருந்து ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் காலை 10.05 மணிக்கு வந்தனர். தைலாபுரம் உள்ளே இருவரும் ஓரே காரில் பயணித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து இருவரும் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். பின்னர், தைலாபுரத்தில் இருந்து நண்பகல் 1.15 மணிக்கு வெளியேறினர்.
அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி கூறும்போது, “ராமதாஸ் என்னுடைய நீண்ட கால நண்பர். என்னை அவருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால், நீண்ட நேரம் பேசினார். நண்பர் என்ற அடிப்படையில் வந்துள்ளேன், பாஜகவுக்காக வரவில்லை. தைலாபுரத்துக்கு அன்புமணி ராமதாஸ் வந்து சென்றது எனக்கு தெரியாது” என்றார். இருப்பினும், மதுரைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி வரும்போது, பாமகவுடன் கூட்டணியை இறுதி செய்ய விரும்புவதால், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராமதாஸுடன் சந்திப்பு குறித்து சிரித்த முகத்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்ததுபோல், அன்புமணி தெரிவிக்க முன்வரவில்லை. காரில் வெளியேறியபோது, இறுகிய முகத்துடன் காணப்பட்டார். இதன்மூலம் அவருக்கும், ராமதாஸுக்கும் சுமுக தீர்வு எட்டவில்லை என்பது தெளிவாகிறது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தரப்பிலும் மிகப்பெரிய ‘அரசியல் நகர்வு’ இருக்கலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT