என்.ஆர்.காங். கட்சியில் பதவி... பதறிய பாஜக ஐடி விங்க் தலைவர் - நடந்தது என்ன?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: பாஜக ஐடி விங் தலைவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பதவி அளித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து சர்ச்சை எழுந்தது. பின்னர், அதை நீக்குவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி உள்ளார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது என்..ஆர்.காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கட்சியில் தொண்டர்களுக்குப் பொறுப்புகள் தரப்பட்டு வருகின்றன. கட்சியைப் பலப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸின் மாநில வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், பிரவீண்குமார் என்பவரைச் செயற்குழு உறுப்பினராக நியமித்துள்ளனர். அவர் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிரவீண்குமார் பாஜகவில் முக்கியப்பொறுப்பில் உள்ளதே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

இதுதொடர்பாக பிரவீண்குமார் வெளியிட்ட அறிக்கையில், "அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் அணியின் செயற்குழு உறுப்பினராக எனது பெயரும், புகைப்படமும் இணைக்கப்பட்டு அக்கட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பரவியது.

நான், கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, தற்போது புதுச்சேரி மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளேன். இந்தச் சூழலில் இவ்வாறாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. உடனே, நான் என்.ஆர்.காங்கிரஸின் மாநில வர்த்தக தொழில் முனைவோர் அணித் தலைவர் வேலாயுதம் என்ற தினகரனைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

இது தவறாக வேறு ஒரு தகவலுடன் எனது பெயர், புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நீக்குவதாக உறுதியளித்தார். அரசியல் உள்நோக்கத்தோடு எனது பெயருக்கும் பொறுப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தச் சிலர் இதைப் பரப்புகின்றனர். நான் பாஜகவில்தான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in