Published : 05 Jun 2025 02:00 PM
Last Updated : 05 Jun 2025 02:00 PM
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 5) நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யூடியூப் சேனல்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று கொண்டு ஜூன் 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT