பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: இபிஎஸ் இரங்கல்

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: இபிஎஸ் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஏற்பாடு செய்த ஆர்சிபி வெற்றி விழா இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே 35 ஆயிரம் பார்வையாளர்களைத்தான் அனுமதிக்க முடியும். ஆனால் சுமார் 2 முதல் 3 லட்சம் வரையிலான ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.

விதான சவுதாவுக்கு எதிரே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. இதில் அரசியல் செய்யவும் விரும்பவில்லை. மைதானத்தின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாலே நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளேன்'' என்றார்.

பெங்களூரு துயரச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in