மொழி குறித்து கமல் புதிதாக எதுவும் சொல்லவில்லை; கர்நாடகாவில் செயற்கையாக சர்ச்சை உருவாக்கம்: ராம.சீனிவாசன்

திருச்சி பாஜக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்.
திருச்சி பாஜக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்.
Updated on
1 min read

திருச்சி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அரசின் சாதனை வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான கோட்டப் பொறுப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம் திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இளைஞரணி தேசிய பொதுச்செயலாளர் ரோஹித், தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர் மாநாட்டில் 5 லட்சம் பேர் ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசம் சொல்ல உள்ளோம். அது கின்னஸ் அல்லது லிம்கா சாதனையாக அமையும். இந்த மாநாட்டில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் புதிதாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தில் பலர் சொன்ன கருத்தைத் தான் கூறி உள்ளார். அது கர்நாடகாவில் செயற்கையாக சர்ச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது. தாய் தமிழின் உதிரத்திலிருந்து தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிறந்ததாக தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதி உள்ளார்.

எப்போது கன்னடர்கள் அதை ஏற்கவில்லையோ; அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

கமல்ஹாசன் கூறியது உண்மையா, பொய்யா என்று பார்க்காமல், கன்னடர்கள் தங்கள் மொழியின் அடையாளத்தை, ஆளுமையை தமிழ் அழிக்கிறது என்று எண்ணினால், கமல்ஹாசன் தான் சொன்னக் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இருமாநிலங்களுக்கு இடையே உள்ள நல்ல உறவு, சகோதரத்துவம், நட்பு ஆகியவற்றை கெடுக்க வேண்டாம். கன்னடர்கள் தரப்பிலும் இதை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

4 திராவிட மொழிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சகோதர மொழிகள் தான். சமஸ்கிருதமோ, தமிழோ எது மூத்தது, பிந்தையது என்ற சர்ச்சைக்குள் செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in