அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக உணவு தர கூடாது: வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவு

அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக உணவு தர கூடாது: வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவு பொருட்களை விநியோகிக்க கூடாது, பஜ்ஜி, சிக்கன் 65 போன்ற உணவுகளில் செயற்கை நிறமிகளை சேர்க்கக் கூடாது என உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

உணவு வணிகர்களின் கவனத்துக்காக 14 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகளை உணவு வணிகர்கள் பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் டைஃபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். தண்ணீரை பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

அதேபோல் உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறை அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டுமே விற்க வேண்டும். விற்பனையாகாமல் மீதமான உணவை பொதுமக்களுக்கு வழங்காமல் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

செய்தித்தாள்கள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் நேரடியாகபடும் வகையில் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது. குறிப்பாக உணவு பொருட்களை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் சூடாக பொட்டலமிடக்கூடாது.

உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை, அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. லேபிள் விவரங்களின்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

உணவு பாதுகாப்புத் துறையின் உரிம எண்ணுடன் கூடிய லேபிள் விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். உணவு மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள், பேக்கரி, இனிப்பகங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது. முக்கியமாக சிக்கன் 65, பஜ்ஜி, கோபி 65 போன்றவற்றில் செயற்கை நிறமிகளை சேர்க்கக் கூடாது.

உணவு வணிகர்கள் அனைவரும் இந்த அறிவிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவுப்பும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in