மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
Updated on
1 min read

மதுரை: திண்டுக்கல் அருகே டாஸ்மாக் மதுபான கடையை 2 வாரத்தில் அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தமிழகத்தில மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் தூரக்கட்டுப்பாடு தவறானது. வணிகப் பகுதிகளில் மதுக்கடை அமைந்திருந்தால் அதற்கு தூரக் கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “மதுபானக் கடை அப்பகுதி மக்களுக்கும், குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பொதுமக்களுக்கு இதுபோல் இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அரசமைப்புச் சட்டப்படி, ஊட்டச்சத்து தரம், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மாநிலத்தின் முதன்மையான கடமையாகக் கருத வேண்டும்.

சிகிச்சை தவிர போதைப்பொருள் கலந்த பானங்கள் மற்றும் சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் போதை மருந்துகளின் நுகர்வைத் தடை செய்ய மாநில அரசு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, அரசு பொது மதுபான விற்பனைக் கடைகளை கூடுதலாக திறப்பதற்கு பதிலாக, மது விலக்கை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே 2 வாரத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in