Published : 04 Jun 2025 08:43 PM
Last Updated : 04 Jun 2025 08:43 PM
கோவை: உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா இன்று (ஜூன் 4) உயிரிழந்தார்.
மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி. இவரது மகள் கருணாம்பிகா பிரபல கட்டிட கலை நிபுணர் மற்றும் கல்வியாளர். ‘தி இந்தியன் பப்ளிக் பள்ளி’ குழுமத்தின் இணை நிறுவனர். இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார் பிரபல தொழிலதிபர். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாம்பிகா (54) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்து உடலைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தினருடன் மொடக்குறிச்சியில் நடந்த இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறும்போது, “கருணாம்பிகா மிகச் சிறந்த கட்டிட கலை நிபுணர், கல்வியாளர், தொழிலதிபர் மட்டுமின்றி பல்வேறு திறமைகளை கொண்டவராக திகழ்ந்தார். மதிப்பீடுகள் சார்ந்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அவரின் இறப்பு, அவரின் குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT